Sunday 1 May 2016

மாரங்கியூர் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் கோயில்

ராமர் உருவாக்கிய ராமலிங்கேசர்...


ஆலயங்கள் நம் நாட்டின் பொக்கிஷங்கள். அவை இறை பக்தியுடன் நம் நாட்டின், தொன்மையையும், மேன்மையையும் தெள்ளென எடுத்துக் கூறுகின்றன. இன்று புதிது புதிதாக பல ஆலயங்கள் உருவாக்கப் பட்டாலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் இறைவனாலும், அவர்தம் பக்தர்களாலும் உருவாக்கப்பட்ட ஆலயங்களின் சான்னித்தியம் சொல்லில் அடங்காதது. அவ்வாலய மூர்த்திகள் வழிபடுவோரின் இன்னல் களைந்து இனிய வாழ்வை அமைத்துத் தருவதை  இன்றும் நம் கண்கூடாகக் காண்கிறோம். நமக்கு ராமரால் உருவாக்கப்பட்ட ராமேஸ்வரம் சிவபெருமானைத் தெரியும். ஆனால் அதற்கு முன்பாகவே ஸ்ரீராமர்  ஆலயம்  அமைத்து வழிபட்ட ராமலிங்கஸ்வமியை தரிசிக்க விழுப்புரம் அருகிலுள்ள மாரங்கியூருக்கு வாருங்கள்!
அவ்வகையில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வெளியில் தெரியாத சின்னஞ்சிறு கிராமம் மாரங்கியூர்.அங்கு 1000 ஆண்டுகளுக்கு மேலான, சங்க காலத்திலேயே சிறப்பு பெற்ற சிவாலயம் ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலயம்.பல  சிறப்புகளையும்,பெருமைகளையும் பெற்ற  அழகிய ஆலயம் இன்று இயற்கை சீற்றத்தாலும், வானிலை  மாறுபாடுகளாலும் சிதைந்து நிற்கின்றதைக் காணவே மனம் கலங்குகிறது. ஆலயத்தின் பெருமை அறிந்த ஊர் மக்கள் மற்றும் சிவனடியார்களால் இன்று அவ்வாலயம் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் காணும் நிலையில் உள்ளது.இனி இவ்வாலய சிறப்புகளைக் காண்போம்.



இவ்வாலயம் ராமேஸ்வரத்துக்கு இணையான சிறப்பு பெற்றதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீராமபிரான் சீதையைத் தேடி வந்தபோது அமாவாசை நாளாக இருக்க, தென் பெண்ணை ஆற்றங்கரையில் தர்ப்பணம் முதலிய பித்ருகாரியங்களைச் செய்தார். ராமேஸ்வரம் சென்று ஈசனை வழிபட விரும்பியவர், அங்கு செல்ல பல நாட்களாகும் என்பதால் மாரங்கியூரில் ஒரு ஆலயம் அமைத்து அதில் சிவலிங்கத்தை ஸ்தாபித்து ஸ்ரீராமலிங்கேஸ்வரராக எண்ணி வழிபட்டார். அதுமுதல் ராமேஸ்வரம் செல்ல இயலாதவர்கள் இவ்வாலயத்தில் சங்கல்பம்செய்த்து பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. திருவிராமேஸ்வரர் என்ற இவ்வாலய ஈசனை  அமாவாசை அன்று வழிபட்டால் இறந்த முன்னோர்களின் ஆசி கிட்டும்; பித்ரு தோஷங்கள் நீங்கும்.

ஆகம விதிப்படி கற்றளியாக எழுப்பப்பட்ட இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் இன்று இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விக்ரமசோழ வானகுலராயன் என்ற மலைய மானன் இவ்வூரைத் தலைநகராகக்  செய்தான். அச்சமயம் திருவெண்ணைநல்லூருக்கருகில் ஓடிக் கொண்டிருந்த தென்பென்னையாறு திசை மாறி பெரிய நகரமாக இருந்த இவ்வூரை அழித்துச் சென்றபோது இவ்வாலயமும் பெருத்த சேதமடைந்தது.


தற்சமயம் சிதைந்து காணப்படும் இராஜகோபுரம் மற்றும் சுற்று மண்டபங்கள் கி.பி. 1069ம் ஆண்டில் மதால்வி கோலன் கொண்டல்  என்ற தேவரடியாரால் கட்டப்பட்டது. இவ்வூரில் கி.மு.1000 முதல் 500ம் ஆண்டுகளில் இருந்த மட்பாண்டங்களும், கற்கால சின்னங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அதன்பின் சமணர்கள் வாழ்ந்த அடையாளமாக தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று உள்ளது. அதன்பின் சம்புவரையர், சோழர், விஜயநகர, பாண்டிய அரசர்கள் ஆண்ட காலத்தில் மிக சிறப்புற்று விளங்கியதற்கான சான்றுகள் கல்வெட்டுகளில் உள்ளன. பின்னர் பெருவெள்ளத்தால் சிதிலமடைந்த இவ்வாலய சிலைகள் தென் பெண்ணையாற்றில் இருந்து மீட்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

பலிபீடம் தாண்டி நந்தி வீற்றிருக்க கருவறையில் காட்சி தரும் ஈசன் ஸ்ரீ ராமலிங்கர் சிறிய ஆவுடையில் அழகாகக் காட்சி தருகிறார். ஈசன் வரப்பிரசாதி என்றும், அமாவாசை பித்ரு தர்ப்பண நாட்களில் இவரை வழிபடுவோர் சிறப்பான வாழ்வைப் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.


மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அன்னை பர்வதவர்த்தினி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு நிகரான காமகோட்ட நாச்சியாராக போற்றப் படுகிறாள். பெண்கள் வேண்டுவதையும், விரும்புவதையும் நிறைவேற்றித்தரும் கற்பக விருட்சமாக விளங்குகிறாள் தேவி. நான்கு கரங்களுடன் காட்சி தரும் தேவியின்  அழகு கண்ணோடு மனதையும் கவர்கிறது.


சங்க காலத்துக் கோயில் என்பதை உணர்த்தும் வகையில் கையில் கட்டாரி என்ற அரிவாளுடன் காட்சி தரும் கொற்றவை உருவம் இங்குள்ளது. ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலக் கொற்றவையம்மன் மான், சிங்கம்,எட்டு கரங்களுடன் அழகுறக் காட்சி தருகிறாள். இவளை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் வழிபடுவோருக்கு கல்வி, பிள்ளை செல்வம், தனம், தான்யம், வீரம், மன நிம்மதி இவை கிட்டும்.  இந்த அமைப்பில் உள்ள கொற்றவை சிற்பம் இந்தியாவில் வேறெங்கும் இல்லை.

இன்னொரு வழிபாட்டுச் சிறப்பு பெற்ற தேவி மூதேவி, ஜ்யேஷ்டா தேவி எனப்படும் மூத்த தேவி. எங்குமில்லாத விதத்தில் இவ்வன்னை தாமரையில் அமர்ந்து வித்தியாசமாகக் காட்சி தருகிறாள். சாதாரணமாக மூதேவிக்கு எங்கும் வழிபாடு கிடையாது. ஆனால் இவ்வூரில் ஒரு வீட்டின் மூத்த மகன், மகள் வியாழக் கிழமைகளில் இவ்வன்னையை வழிபட்டால் அவர்கள் குடும்பம் சிறப்பு பெறும் என்பதால் அவ்வூருக்கு அருகிலுள்ளோர் ஏராளமானோர் வந்து வணங்கி பயனடைவதாகச் சொல்கின்றனர்.


இவை தவிர கணபதி, அசுர மயிலில் வேகத்துடன் காட்சி தரும் ஆறுமுகப் பெருமான், சண்டிகேசர், பைரவர், சூரிய சந்திரர், பிட்சாடனர்,சப்த கன்னியர் என்று அத்தனை சிற்பங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இத்துணை  சிறப்பும், பெருமையும் பெற்ற இவ்வாலயத்தை மீண்டும் உருவாக்க, ஆகம விதிப்படி பழைய நிலையிலேயே கட்ட எண்ணி திருப்பணி நடைபெறுகிறது.ஸ்ரீ ராமர் வழிபட்ட சிறப்பு பெற்ற இவ்வாலயம் மீண்டும் பூஜைகளும், விழாக்களும் நடந்து இறைஅருளை  அனைவரும்  பெற இவ்வாலய கும்பாபிஷேகம் இவ்வாண்டு இறுதிக்குள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திருப்பணிக்கு அனைவரும் தம்மால் இயன்ற பொருளுதவி செய்தாலே திருப்பணி விரைவில் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற முடியும். 

நமக்கு அருள் செய்யத் தயாராகக் காத்திருக்கும் தெய்வங்களுக்கு, நாம் சரியான முறையில் ஆலயம் அமைத்து வழிபாட்டைச் செய்தாலே அவர்கள் மனம் மகிழ்ந்து நம் குடும்பத்தையும், நம் நாட்டையும் சீர்பெறச் செய்வர். அன்பர்கள் இவ்வாலயம் சென்று தரிசனம் செய்து திருப்பணிக்கு உதவிடலாம்.
ஆலயம் விழுப்புரத்திலிருந்து பேருந்து மார்க்கத்தில் கல்பட்டு என்ற இடத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் செல்ல வேண்டும்.
திருவெண்ணெய் நல்லூர் - ஏனாதிமங்கலம் வழியில் இறங்கி  1 கிலோமீட்டர் செல்ல வேண்டும்.

Attachments



No comments:

Post a Comment