Monday 2 May 2016

திருத்தணி

திருத்தணி ஆலயம் செல்லும் நாம் இறைவனை வணங்கி வருவோம். ஆனால் அத்தலத்தில்  சிறப்பான பல பெருமைகள் உள்ளன. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி மலைக்கு 365 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இவை ஒரு வருட நாட்களைக் குறிகின்றன.

சந்நிதி வாயிலின் தென்புறத்தில் 'பிரசன்ன காதர் ஈஸ்வரர்' என்ற சிவசந்நிதி  உள்ளது.தனக்கு ஏற்பட்ட ஒரு துன்பத்தை நீக்கி அருள் செய்த காரணத்தால் காதர் என்ற நவாப் இந்த லிங்கத்தை நிறுவியதோடு, ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் நவாப் வாத்திய மண்டபத்தையும் அமைத்துள்ளார்.இங்கு நாள்தோறும் பூஜை வேளைகளிலும்,உற்சவ காலங்களிலும் மகம்மதியர்கள் வாத்தியம் வாசிப்பார்கள். இந்து, முஸ்லீம் ஒற்றுமை உணர்வுக்கு இது ஒரு நல்ல சான்றாகும்.

வடக்கு பிரகாரத்தில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அரைக்கும் பெரிய கல் ஒன்று உள்ளது.இது தெய்வயானைக்கு இந்திரன் சீதனமாகக் கொடுத்ததாம். நூற்றுக் கணக்கான ஆண்டுகள் ஆகியும் இக்கல் தேயாமல் இருப்பது அதிசயமாக உள்ளது. இதில் அரைக்கும் சந்தனம் சுவாமிக்கு பூசப் பட்டு, பின் அடியார்களுக்கு  'பாதரேணு' என்ற அருட்பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.இது அனைத்து நோய்களையும்
தீர்க்கும். நோயுற்றோர் இப்பாதரேணு சந்தனத்தைப் பெற்று நாள்தோறும் மிளகு அளவு சாப்பிட வேண்டும்.

போருக்குப் பின் இங்கு சினம் தணிந்து எழுந்தருளி இருப்பதால் இங்கு சூரசம்ஹார விழா கிடையாது. வருடத்திற்கு இரண்டு பிரம்மோற்சவம் இவ்வாலயத்தின் சிறப்பு. மகாசிவராத்திரி அன்று இரவில் முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

தணிகை முருகன் மூலவரின் மார்பில் சிறிது பள்ளமாக இருக்கும். தாரகாசுரன் திருமாலிடமிருந்து பறித்துக் கொண்ட சக்கரத்தை, அவனை வென்று முருகன் சிலகாலம் தம் மார்பில் அணிந்து கொண்டார். அந்த அடையாளமே அந்தப் பள்ளம். அதில் அணிவிக்கப்பெறும் சந்தனமே சர்வரோக நிவாரணியான பாதரேணு.

கிழக்குப் பிரகாரத்திலுள்ள ஐராவதம் இந்திரனால் சீதனமாகக் கொடுக்கப்பட்டது. ஐராவதம் நீங்கியதால் இந்திரனின் செல்வ  வளம் குறைந்ததால், இந்திரன் வேண்டிக் கொண்டபடி அது இந்திரலோகம் இருக்கும் கிழக்கு திசை நோக்கி நிற்கிறது.

No comments:

Post a Comment