Wednesday 22 June 2016

லலிதா சகஸ்ரநாமம்

லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?
லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த
பிரிக்கமுடியாத ஆதிப் பரம் பொருள். சிவசக்தி ஐக்கியம்
என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.
"துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே"
என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின்
ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம்
செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல,
ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள்
பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான
ஞானம் உருவாகும். சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர்
அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின்
பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.
தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன்.
இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி
ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும். செல்வத்தை
அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால்
அகால மரணம்) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு
இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.
கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி
பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை
செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில்
அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற
இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம்
செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப்
புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.
இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு
வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன் .
பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை
தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள்
நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப்
பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி
தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது
வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.

இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே
தோஷங்கள் விலகிவிடும்.ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ,
ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா
சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம்
செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால்
மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும்
செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப்
பெறமுடியாது" என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி
என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு
உபதேசிக்கிறார். லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு
சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது
சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட
புண்ணியம் நமக்கு சேரும்.

எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து
பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய
விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.

Monday 20 June 2016

மகாபெரியவா திருவடி சரணம்!





மகாபெரியவர் பலர் வாழ்க்கையில் அனுக்கிரகம் செய்ததை எல்லாம் தினமும் படிக்கும்போதும், பலர் கூறும்பொழுதும்  நமக்கும் அப்படி ஒரு வரம் கிடைக்கவில்லையே என்று எண்ணிக் கொள்வேன். நான் ஐந்தாம் வகுப்பில் படித்த சமயம் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு  பள்ளியில் மகாபெரியவரும், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் வந்து தங்கியிருந்தனர். நாங்கள் தினமும் இரண்டு வேளையும் சுவாமிகளை தரிசனம் செய்து வருவோம்.


அப்பொழுதெல்லாம் மடத்தில் ,ஒரு லட்சம் ஸ்ரீராமஜெயம் எழுதினால் ஒரு காமாக்ஷி வெள்ளிக் காசும், பிரசாதமும் அனுப்புவார்கள். நாங்கள் எழுதிய ராம நாமாக்களை ஸ்ரீ ஜெயேந்திரரிடம் கொடுத்து காசும், பிரசாதமும் பெற்றோம்.நான்கைந்து நாட்கள் ஸ்வாமிகள் தங்கியிருப்பார் என்றார்கள். ஆனால் அதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே விடிகாலை கிளம்பி சென்று விட்டார் என்றார்கள். பெரியவர் மிகுந்த கோபக்காரர் என்றும், அவருக்கு சரியாக மரியாதை இல்லாததால் கிளம்பி விட்டார் என்றும் வதந்திகள்.

அதன்பின் திருமணம் ஆனபின் என் கணவர் குடும்பத்தாருடன் காஞ்சிக்கு பெரியவரை தரிசிக்க சென்றோம்.அதன்பின் வடக்கே மாற்றலாகிவிட அவரை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை.



சென்ற பிப்ரவரி மாதம் சென்னையிலிருந்து நானும், என் கணவரும் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தோம். காரை என் கணவர் ஓட்டி வந்தார். மதியம் மூன்று மணி இருக்கும்.விழுப்புரம் அருகே வந்தபோது காரில் ஏதோ தீவது போல நாற்றம் வந்து, அதற்கு மேல் நகராமல் நின்று விட்டது. ஊருக்கு வெளியே யாரை, எங்கு போய்த் தேடுவது என்று புரியவில்லை.அந்த இடத்தில் நல்ல வேளையாக ஒரு லாரி மெக்கானிக் கடை இருந்தது.அங்கு இருந்தவர்களைக் கேட்க அவர்கள் ஊருக்குள் இருக்கும் ஒரு கார் மெக்கானிக் கடைக்கு ஃபோன் செய்து அவர்கள் வந்து பார்த்து காரில் க்ளட்ச் மாற்ற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அந்த மெக்கானிக் எங்களை காரிலேயே அமரச் சொல்லி, மெதுவாக காரை ஊருக்குள்ளிருந்த அவரது கடைக்கு எடுத்து சென்றார். வேலை முடிய இரவு பத்து மணி ஆகும் என்றதால் என்ன செய்வது என்று புரியவில்லை.இரவு காரில் செல்ல முடியாது என்பதால் ஒரு ஹோட்டலில் தங்கி விட்டோம்.




அப்பொழுதுதான் எனக்கு சட்டென்று ஒரு நினைவு வந்தது. இது மகாபெரியவரின் ஊராயிற்றே.இங்கு சங்கர மடம் இருக்குமே என்ற நினைவு வர, என் கணவரிடம் மடத்துக்கு சென்று பெரியவரை தரிசனம் செய்து வருவோம் என்றேன்.ஒரு ஆட்டோவில் மடத்துக்கு சென்றோம். பெரியவரின் அவதார ஸ்தலமாகிய அவரது இல்லமே பாதுகா மண்டபம் என்னும் சங்கர மடமாக உள்ளது. அவர் பிறந்த அறையில் அவரது  திருவுருவ சிலையும், பாத தரிசனமும் மெய்சிலிர்க்க வைத்தது.




மடத்தின் நிர்வாகி மிக நன்றாக மடத்தில் நடக்கும் பாடசாலை மற்றும் பெரியவர் பற்றிய விஷயங்களை விளக்கினார். பெரியவர் அங்கு பலமுறை வந்து தியானத்தில் அமர்ந்து பூஜை செய்திருக்கிறார் என்றும், இப்பொழுதும் ஸ்ரீ ஜெயேந்திரரும், பால பெரியவரும் அடிக்கடி வந்து பூஜை செய்வார்கள் என்றும் கூறினார்.

அங்குள்ள பெரிய அறையில் மகாபெரியவரின் அழகான சிலை ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. நேரிலேயே அவர் அமர்ந்திருப்பது போல் காணப்படுகிறது. ஒரு பல்லக்கில் பெரியவரின் புகைப்படம் வைக்கப் பட்டுள்ளது.




அன்று நாங்கள் ஹோட்டலில் சாப்பிட முடியாது என்பதால் மடத்தின் நிர்வாகியிடம் அங்கு இரவு ஏதாவது சாப்பிட முடியுமா என்று கேட்டோம். அவரும் உடன் அங்கு வேதம் பயிலும் குழந்தைகளுக்கு சமையல் செய்யும் மாமியிடம் சொல்லி அரிசி உப்புமா செய்து பரிமாற, அந்த உப்புமா தேவாமிர்தமாக இருந்தது.


அந்த வீட்டில்தான் பெரியவர் பிறந்து, தவழ்ந்து, விளையாடி, வளர்ந்த இடம் என்பதைக் கேட்டபோது மனமும், மெய்யும் சிலிர்த்து விட்டது. சுவாமிகள் நடந்த அந்தப் புனிதமான இடத்தில் இன்று நாமும் அமர்ந்திருப்பதை நினைக்க 'என்ன தவம் செய்தோமோ நாம்' என்று ஆனந்தம் ஏற்பட்டது.

பல முறை சென்னையிலிருந்து, திருச்சிக்கு போய் வந்தும், ஒருமுறை கூட சுவாமியின் அவதார ஸ்தலம் செல்ல வேண்டும் என்று எண்ணியதில்லை. சுவாமிகள் காரை வழியில் நிறுத்தி அவரின் தரிசனம் எங்களுக்கு கொடுத்ததுடன், பிரசாதமும் அருளியதை நினைக்க எங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

எங்களுக்கு பெரியவரால் எந்த அனுபவமும் இல்லையே என்று நான் மனதில் நினைத்ததை அறிந்து அதை நிறைவேற்றி வைத்த பெரியவரின் அருளை என்ன சொல்வது?



மகாபெரியவா திருவடி சரணம்!